யோகம் என்றால் என்ன?
9:01 PM
SHREE VILVAM YOGA CENTRE
, Posted in
benefit of yoga
,
vilvam yoga
,
yogasanam
,
யோகம்
,
யோகா
,
யோகாசனம்
,
0 Comments
யோகம் என்றால் என்ன?
யோகம் என்ற சொல் 'யுஜ்' என்ற சமஸ்கிருத மொழியில் உள்ள சொல்லின் வழியே பிறந்ததாகும். யோகம் என்ற சொல்லுக்கு “ஒருங்கிணைத்தல்” அல்லது “எல்லாவற்றையும் எந்தவிதமான வேறுபாடுமின்றி முழுமைப்படுத்துதல்” என்றும் பொருள் கூறுகின்றனர்.
யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர். யோகம் தமிழில் தவம் அல்லது ஜெபம் எனப்படும்.
யோகப் பயிற்சியில் சித்தி பெற்ற அறிஞர்கள் இயற்கையைத் தன்வயப்படுத்தும் ஆற்றலை அடைவார்கள். யோகக் கலை சாகாக் கலை என்று பல அறிஞர்கள் கூறுவர். யோகப் பயிற்சியால் நீண்ட நாள் வாழலாம். யோகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய கலையாகும். சிவயோகம் இந்த யோகம் என்னும் அரும்பெரும் ஆன்மீகக்கலை நம் முன்னோர் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்ட அரும்பெரும் கலை. இக்கலை இன்று சைவ சமய சாத்திரங்களில் அழகுற மிக நுணுக்கமாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. யோகத்தை சிவயோகம் என்பதும், இது சிவனார் மக்களுக்கு உபதேசித்துக் கொடுத்த கலை என்பதும் தெறிந்ததே. உலகிலே முதன் முதலாக யோகக் கலையைக் கண்டவர்கள் சிவனை வழிபடும் சிவனெறியாளர்களே. யோக முறை யோகாசன முறைகளை முறையோடு பின்பற்ற வேண்டும். உள்ளுறுப்புகள் தான் யோகாசனத்தில் முழுக்கப் பயன்படுகின்றன. உள்ளுறுப்புகள் தூய்மை பெறவும் வலிமை பெறவும் பயிற்சி செய்யும் நேரத்தில் மிகவும் நியமத்துடன் பயபக்தியுடன் நெறி பிறழாது செய்ய வேண்டும்.
யோகப் பயிற்சியின் சிறப்புகள்
1. தேகத்திற்கு வந்த நோய்களைப் போக்கியும் இனி நோய்கள் வராமல் காத்தும் ஒருவருக்கு உகந்த உன்னத உடலை உருவாக்குகிறது.
2.உள்ளுறுப்புகளையும் வெளியுறுப்புகளையும் தூய்மைப்படுத்தி அது தன் பணிகளை அருமையாகவும் திறமையாகவும் அயராமல் செயல்படுத்தத் தூண்டுகிறது.
3. சாதாரணமாகச் செயல்படும் ஒருவனுடைய செயலாற்றலை மிகுதிப் படுத்துவதுடன் உடல் நலமும், மனவளமும் பெற்று வாழ உற்சாகப்படுத்துகிறது.
4. அன்றாடம் உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்களை வெகு விரைவாக வெளிப்படுத்தவும், உடலைக் கசடற்ற முறையில் வைத்துக் காக்கின்ற சக்தியினையும் உடலுக்குத் தருகின்றது. அதாவது நரம்புகள், மூளை, நுரையீரல், இதயம், ஜீரண உறுப்புகள் போன்ற அவயவங்களுக்கு திறமையுடன் வேலை செய்கின்ற ஆற்றலை அளிக்கிறது.
5. நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் துணை புரிகிறது. மனதாலும், செயலாலும், உயர்ந்த வாழ்வு வாழத் தூண்டுகிறது. இவ்வாறு தேகநலனைப் பற்றியும், சிறந்த ஆரோக்கிய வாழ்வு முறையைப் பற்றியும் யோகமுறை உடற்பயிற்சி முறைகள் நிறைந்து செயல்படுகின்றன.
ஆசனம் செய்வதால் உண்டாகும் பயன்கள்:
1. ஆசனங்களை முறையோடு செய்து வந்தால் உடல்வளம் பெறுவதுடன், மிகவும் சுறுசுறுப்போடும் விரைவாகவும் அன்றாட வாழ்வில் இயங்க முடியும்.
2. முதுகெலும்பு எளிதில் வளைந்து இயங்கும் ஆற்றலைப் பெறுவதால், எதனையும் சிறப்பாகப் பணியாற்றும் வகையில் உடலில் ஒத்துழைப்பு உயர்ந்த அளவில் கிடைக்கிறது.
3. பசி நன்றாக எடுக்கிறது. உடலில் பற்றிக் கொள்கின்ற நோய்கள் தொடக்க நிலையிலேயே முறியடிக்கப்படுகின்றன.
4. மிகவும் முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல்கள் மற்றும் மூளைப்பகுதிகள் செழிப்படைந்து சிறப்புடன் பணியாற்ற முடிகிறது.
5. தங்கு தடை இல்லா இரத்த ஓட்டம் உடலெங்கும் இயல்பாக ஓடி, உடலைப் பூரணப் பொலிவு பெற வைக்கிறது.
6. உடல் அவயங்கள் எல்லாம் விறைப்பாக இருக்காமல், எளிதில் செயலுக்கு இணங்கும் தன்மையில் இருந்திட வழி அமைகிறது.